Published Date: January 18, 2023
CATEGORY: CONSTITUENCY
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறும் மதுரை நான்கு மாசி வீதியில் சித்திரை வீதிகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்றும் பணியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழாவின் போது தேர்வலம் வரும் நான்கு மாசி வீதிகள், சித்திரை வீதிகளில் மேலே ஏறத்தாழ 9 கி.மீ.தொலைவுக்கு உயர் அழுத்த மின் பாதையையும், 18 கி.மீ.தொலைவுக்கு தாழ் மின்னழுத்த மின் பாதையையும் செல்கின்றன.
தேர் திருவிழாவின் போது லட்சக்கணக்கில் திறலும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேர்வலம் வரும் மின்பாதைகளில் மின் துண்டிப்பு செய்யப்படுகிறது. தேர் வீதிகளை கடந்த பின்பு மின் சீரமைப்பு செயப்படுகிறது. மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய இந்த கடினமான பணியால், நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
இதைத் தவிர்க்கும் வகையில் நான்கு மாசி வீதிகளிலும் மேலே செல்லும் மின் கம்பிகளை புதை வடக்கம்பிகளாக மாற்றும் பணிக்கு ரூ.11.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்தப் பணிக்கான பூஜை, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனிஷ்சேகர், மேயர் இந்திராணி, அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தப் பணியை ஓராண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பான இந்த முறையால் சித்திரை திருவிழாவில் திருத்தேர் வலம் வரும்போது மிக எளிமையாக மின் துண்டிப்பு செய்ய இயலும். இதனால் மின் துண்டிப்பு கால அளவு வெகுவாகக் குறையும். இந்தத் திட்டத்தின் மூலம் மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம் வலம் வரும் நான்கு சித்திரை, மாசி வீதிகளில் உயரழுத்த மின்பாதை - 9.617 கி.மீ., தாழ் மின் அழுத்த பாதை 18.669 கி.மீட்டருக்கு மாற்றப்படுகிறது.
Media: Dinamani